செய்திகள்
கொள்ளை

நெல்லை அருகே கோவில் பூட்டை உடைத்து 11 பவுன் நகை கொள்ளை

Published On 2021-06-30 07:40 GMT   |   Update On 2021-06-30 07:40 GMT
நெல்லை மாவட்டம் பழவூர் அருகே கோவிலில் ரூ.4 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள சாலைபுதூரில் நாராயண சுவாமி கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலை அதேபகுதியை சேர்ந்த சின்னப்பா என்பவர் நிர்வகித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக கோவில்கள் திறக்கப்படவில்லை.

இதனால் நாராயணசுவாமி கோவிலில் சின்னப்பா மட்டும் சென்று தினமும் விளக்கு ஏற்றி பூஜை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோவிலை அடைத்துவிட்டு வீடு திரும்பி விட்டார். மறுநாள் காலை அவர் கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

உடனே சின்னப்பா உள்ளே சென்று பார்த்த போது சுவாமியின் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க நகைகளை காணவில்லை. மர்மநபர்கள் யாரோ நகைகளை திருடி சென்றதை அறிந்த அவர் பழவூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவு 1 மணி அளவில் மர்மநபர் ஒருவர் மட்டும் கோவிலின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச்செல்வது பதிவாகி இருந்தது.

அதன் மூலம் போலீசார் மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர். திருட்டு போன 11 பவுன் நகைகளின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

Tags:    

Similar News