செய்திகள்
விழுப்புரம் பாண்டி சாலையில் உள்ள அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த அலைமோதிய மக்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

விழுப்புரத்தில் மின் கட்டணம் செலுத்த அலைமோதிய மக்கள் கூட்டம்

Published On 2021-06-16 03:20 GMT   |   Update On 2021-06-16 03:20 GMT
விழுப்புரத்தில் மின் கட்டணம் செலுத்த மக்கள் கூட்டம் அலைமோதியது. இவர்கள் அரசின் விதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு கூட்டமாக நின்றதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
விழுப்புரம்:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மே மாதம் 24-ந் தேதி முதல் 31-ந் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு சமயத்தில் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தையும் அரசு நீட்டித்தது. அதாவது சிறு, குறு தொழில்கள் மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த மே 31-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 15 வரை இந்த அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது. அதுபோல் ஏப்ரல் மாத மின் கட்டணம் செலுத்தாத உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு தாமத கட்டணத்துடன் ஜூன் 15-ந் தேதி வரை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

மின் கட்டணத்தை இணையதளம், செல்போன் செயலி போன்ற 'டிஜிட்டல்' முறையில் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் செலுத்தும் வசதி இருந்தாலும் பலரும் மின் கட்டண மையங்களில் செலுத்தி வருகின்றனர். மின் வாரியத்திற்கு மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளும், வாரத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை. இதனால் அன்றைய தினங்களில் மட்டும் மின் கட்டண மையங்கள் செயல்படாது. மற்ற நாட்களில் மின் கட்டணம் செலுத்தலாம்.

இந்நிலையில் மின் கட்டண மையங்களில் அபராதமின்றி கட்டணம் செலுத்த வழங்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.இதனால் மின் கட்டணம் செலுத்த கடைசி நாளான நேற்று மின் கட்டண மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அந்த வகையில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகம் (நகரம்-1), உதவி மின் பொறியாளர் அலுவலகம் (நகரம்-2), உதவி மின் பொறியாளர் அலுவலகம் (கிராமம்/ மேற்கு) ஆகிய அலுவலகங்களில் உள்ள மின் கட்டண மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த மையங்கள் காலை 8.30 மணிக்கு திறக்கப்பட்டன. ஆனால் அதற்கு முன்பாகவே பொதுமக்கள் ஏராளமானோர் மின் கட்டணம் செலுத்த காத்துக்கிடந்தனர். மின் ஊழியர்கள், காலை 8.30 மணி முதல் மின் கட்டணத்தை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களின் கூட்டத்தை சமாளித்து உடனுக்குடன் மின் கட்டணத்தை வசூலிக்கும் பணியை மேற்கொள்ள கூடுதலாக மின் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்த மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஒரு கட்டத்தில் 3 அலுவலகங்களில் உள்ள மின் கட்டண மையங்களிலும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

இவர்களில் பலர் முக கவசமும் அணியவில்லை. அதுபோல் சமூக இடைவெளியை மறந்து ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்றிருந்தனர். கொரோனா தொற்று பரவலையும் மறந்து, அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு மின் கட்டணத்தை செலுத்துவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தினர்.

இதுவே கொரோனா பரவலுக்கு வழிவகுப்பதாக அமைந்தது. மின் கட்டணம் வசூலிக்கும் பணி வழக்கமாக மதியம் 2.30 மணிக்கெல்லாம் முடிவடைந்து விடும். ஆனால் நேற்று மாலை 4 மணி வரை மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இருப்பினும் பலர் மின் கட்டணம் செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். எனவே மின் கட்டணம் செலுத்தும் கால அவகாசத்தை சில நாட்கள் அரசு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News