செய்திகள்
சவுண்டல் மரம்

சவுண்டல் மரங்கள் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் உடுமலை விவசாயிகள்

Published On 2021-06-15 06:36 GMT   |   Update On 2021-06-15 06:36 GMT
அனைத்து வகை பயிர்களிலும் பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களை அரணாக நின்று சவுண்டல் மரங்கள் தடுக்கிறது.
உடுமலை:

பொதுவாக கால்நடை வளர்ப்பில் பசுந்தீவனங்களை அதிக அளவில் கொடுப்பதன் மூலமே பால் உற்பத்தியைப்பெருக்க முடியும். இதற்கென பெரும்பாலான விவசாயிகள் விளைநிலங்களில் ஒரு பகுதியை ஒதுக்கி குதிரை மசால், முயல் மசால், நேப்பியர் புல் போன்ற தீவனப்பயிர்களை வளர்ப்பார்கள். ஆனால் விளைநிலத்தில் இடம் ஒதுக்காமலேயே தீவன தேவையைப் பூர்த்தி செய்வதில் முதலிடத்தில் இருப்பது சவுண்டல் மரங்களாகும். திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதி விவசாயிகள் இந்த மரங்களை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாந்தோப்பு மற்றும் தென்னந்தோப்பில் வேலிப்பயிராக சவுண்டல் மரம் வளர்த்து கால்நடைகளின் தீவனத்தேவையை விவசாயிகள் பூர்த்தி செய்து வருகிறார்கள். வேலியோரத்தில் இதன் விதைகளை நட்டு வைத்து 3 நாட்கள் தண்ணீர் ஊற்றினால் போதும். அதன்பிறகு தானாகவே வளரத்தொடங்கி விடும். எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய இந்த மரங்கள் காற்று தடுப்பானாக செயல்படுகிறது. இதனால் பழ மரங்களில் பூ, பிஞ்சு உதிர்வதைத் தடுக்க முடியும். மேலும் அனைத்து வகை பயிர்களிலும் பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களை அரணாக நின்று சவுண்டல் மரங்கள் தடுக்கிறது.

வேலிப்பயிராக நடப்படும் சவுண்டல் மரங்கள் உயிர்வேலியாக செயல்படுவதால் பிரதானப்பயிர்களில் பூச்சி, நோய் தாக்குதல் குறைகிறது. மேலும் இதன் வேர்கள் பரவலாக உள்ளதால் மண் அரிப்பை  தடுக்கிறது. சவுண்டல் மரங்களில் ஆறு மாதங்களிலிருந்தே அறுவடையை  தொடங்கலாம். இருந்தாலும் வறட்சியான பகுதிகளில் 2 வருடம் வரை வளர விட்டு அதன் வேர்ப்பகுதி மண்ணில் ஆழமாக ஊன்றிய பிறகு அறுவடை செய்வது நல்லது. 

ஒரு ஏக்கரில் சவுண்டல் வளர்த்தால் 16 ஆயிரம் கிலோ தீவனம் பெற முடியும். வறண்ட பகுதிகளிலும் ஆண்டு முழுவதும் பசுந்தீவன உற்பத்தி செய்யக்கூடியது சவுண்டல் மரங்கள் என்பதால் கால்நடை வளர்ப்பில் ஈடுபாடுள்ள விவசாயிகள் ஆர்வத்துடன் இதனை வளர்க்கலாம். ஒரு முறை நடவு செய்தால் 55 ஆண்டுகள் வரை பயன் தரக்கூடியதாக சவுண்டல் உள்ளது என கால்நடை வளர்ப்போர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News