செய்திகள்
மரவள்ளிகிழங்கு

மரவள்ளிகிழங்கு விலை சரிவால் விவசாயிகள் கவலை

Published On 2021-06-13 08:26 GMT   |   Update On 2021-06-13 08:26 GMT
மரவள்ளிகிழங்குக்கு கேரளா முக்கிய விற்பனை சந்தையாக உள்ளது. அங்கு சிப்ஸ் மற்றும் உணவு தயாரிப்பில் மரவள்ளி கிழங்கு முக்கிய இடம் பிடிக்கிறது.
உடுமலை:

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பரவலாக மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. இச்சாகுபடிக்கு தேவையான கரணைகளை கேரளாவில் இருந்து விலைக்கு வாங்கி வந்து நடவு செய்கின்றனர். சாகுபடியில் மரவள்ளி கிழங்குகள் அறுவடைக்கு 10 மாதங்களாகிறது. இவ்வாறு நீண்ட கால பராமரிப்பு தேவைப்படும் சாகுபடியில் பருவநிலை ஒத்துப்போனால் ஏக்கருக்கு 15 டன் வரை விளைச்சல் கிடைக்கும்.

சராசரியாக கிலோவுக்கு ரூ.12 முதல் ரூ.15 வரை விலை கிடைக்கும். இதனால் ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் வரை இடுபொருட்கள் ஆகியவற்றுக்காக செலவிட்டு இச்சாகுபடியை உடுமலை பகுதி விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சீசனில் ராகல்பாவி, முக்கோணம், கொங்கல்நகரம் உட்பட பல இடங்களில் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். ஆனால் அறுவடை துவங்கியதும் மரவள்ளி கிழங்கு விலை கிலோ ரூ.5 அளவுக்கு சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மரவள்ளி கிழங்குக்கு கேரளா முக்கிய விற்பனை சந்தையாக உள்ளது. அங்கு சிப்ஸ் மற்றும் உணவு தயாரிப்பில் மரவள்ளி கிழங்கு முக்கிய இடம் பிடிக்கிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கேரளா வியாபாரிகள் யாரும் மரவள்ளி கிழங்கு கொள்முதல் செய்ய வரவில்லை. இதனால் கிழங்கு விற்பனை செய்ய முடியாமல் குறைந்த விலை கிடைத்தால் கூட போதுமானது என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

முக்கோணம் விவசாயி ஒருவர் கூறுகையில், உடுமலை பகுதியில் சாகுபடியாகும் மரவள்ளிக்கிழங்கு கேரளாவில் உணவு பொருட்கள் தயாரிப்பில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஈரோடு உட்பட பகுதிகளில்  ஸ்டார்ச் தயாரிப்புக்காக பிரத்யேக ரகங்களை சாகுபடி செய்கின்றனர். இங்கு விளையும் கிழங்கில் மாவுச்சத்து போதுமான அளவு இருப்பதால் விலையும் கிடைத்து வந்தது.

நடப்பு சீசனில் கேரளா வர்த்தகம் முடங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, பிற மாவட்ட தேவைக்காக வியாபாரிகள் குறைந்த விலைக்கு மரவள்ளிகிழங்கை கொள்முதல் செய்து செல்கின்றனர் என்றார்.
Tags:    

Similar News