செய்திகள்
சசிகலா

சாதி அரசியல் செய்வது ரொம்ப தவறு- தொண்டரிடம் பேசும் சசிகலா

Published On 2021-06-09 03:46 GMT   |   Update On 2021-06-09 03:46 GMT
சசிகலா ஒவ்வொரு தொண்டர்களையும் செல்போனில் தொடர்பு கொண்டு, அவர்களின் உடல்நலம் விசாரிப்பதோடு, கட்சி நிலவரத்தை பற்றியும் பேசி வருகிறார்.
சென்னை:

சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய சசிகலா, பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பியதும் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதன் பின்னர், அவர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றார். இந்த நிலையில் மீண்டும் சென்னை திரும்பிய அவர், ஒவ்வொரு தொண்டர்களையும் செல்போனில் தொடர்பு கொண்டு, அவர்களின் உடல்நலம் விசாரிப்பதோடு, கட்சி நிலவரத்தை பற்றியும் பேசி வருகிறார்.

அந்தவகையில் சசிகலா, மதுரையை சேர்ந்த திருநங்கை சுஜாதா ஹர்சினி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மேகலா மற்றும் துரைராஜ், வின்சென்ட் ராஜா என தொண்டர்களை நேற்று செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்களிடம் 
சசிகலா
 பேசியதாவது:-



தொண்டர்கள் மனதை இப்போது கட்சியில் இருப்பவர்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. சாதி அரசியல் செய்வது ரொம்ப தவறு. எல்லாவற்றுக்கும் முடிவு உண்டு. தொண்டர்களோடு இருந்து, எம்.ஜி.ஆர். (தலைவர்), ஜெயலலிதா (அம்மா) காலத்தில் எப்படி கட்சியை நடத்தினார்களோ? அப்படிதான் நான் கட்சியை நடத்துவேன்.

தொண்டர்கள்தான் கட்சி என்று நான் நினைக்கிறேன். கவலைப்படாதீர்கள் விரைவில் நான் எல்லோரையும் சந்திக்கிறேன். நல்லபடியாக கட்சியை கொண்டு வருவோம். ஆட்சிக்கும் வருவோம். எல்லாமே என் பிள்ளைகள்தான். கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் நிச்சயம் வருவேன்.

தொண்டர்கள் மனக்குமுறலை தெரிவிக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து மன வருத்தத்தில்தான் தொண்டர்களிடம் பேச ஆரம்பித்து இருக்கிறேன். தொண்டர்களின் மனக்குமுறலை தாங்க முடியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது ஒரு தொண்டரிடம் சசிகலா பேசுகையில், ‘முக கவசம் அணியாமல் இருக்காதீர்கள். அது ரொம்ப முக்கியம். வீட்டில் இருப்பவர்களுக்கும் சொல்லுங்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமும் அதை சொல்லுங்கள்' என்றார்.
Tags:    

Similar News