செய்திகள்
சென்னை உயர்நீதிமன்றம்

டாஸ்மாக் கடையை எதிர்த்து போராடிய 10 பெண்கள் மீதான வழக்கு ரத்து - உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On 2021-04-16 12:38 GMT   |   Update On 2021-04-16 12:38 GMT
வருமானத்தை அதிகரிக்க டாஸ்மாக் அமைப்பது கொள்கை முடிவு தான் என்றாலும், டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுவோர் அதற்கு எதிராகப் போராட உரிமை உண்டு என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை:

சேலம் மாவட்டம், கருமலைக்கூடல் பகுதியில், டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது மதுக்கடை மீது கல்வீசி தாக்கியதாக டாஸ்மாக் கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், 10 பெண்கள் உள்பட பலர் மீது காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். 

கடந்த 2017 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.



இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “வருமானத்தை அதிகரிக்க டாஸ்மாக் அமைப்பது கொள்கை முடிவு தான் என்றாலும், டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுவோர் அதற்கு எதிராகப் போராட உரிமை உண்டு” என்று கருத்துத் தெரிவித்தார். இதனையடுத்து டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடிய 10 பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News