செய்திகள்
கோப்புபடம்

பிரசாரத்தின் போது கொரோனா பரவல் தடுப்பு விதிகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் - அரசியல் கட்சிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2021-03-27 09:08 GMT   |   Update On 2021-03-27 09:08 GMT
தேர்தல் பிரசாரத்தின் போது, கொரோனா தொற்று பரவல் தடுப்பு விதிகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

தொண்டர் இயக்கத்தின் மாநில தலைவர் தொண்டர் சுப்பிரமணி. இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால், பொதுமக்கள் வருவாய் இழந்து கடுமையாக சிரமப்பட்டனர்.

படிப்படியாக இந்த தொற்று குறைந்ததால், இயல்பு வாழ்க்கைக்கு பொதுமக்கள் தற்போதுதான் வந்துள்ளனர். ஆனால், கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசத் தொடங்கியுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போது தேர்தல் நேரம் என்பதால், தொண்டர்கள் கும்பலாக பிரசாரத்தில் ஈடுபடுவதால், மேலும் வைரஸ் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால், தேர்தல் பிரசாரத்தின் போதும், வாக்குப்பதிவின்போதும், கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக கடைபிடிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராம மூர்த்தி ஆகியோர், ஏற்கனவே ஒரு வழக்கில், தேர்தலின் போது கொரோனா தடுப்பு விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.

இப்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பு விதிகள் முறையாக பின்பற்ற வேண்டும். இதை வாக்காளர்களின் மத்தியில் விளம்பரப்படுத்துவதும் அவர்களது கடமை.

வாக்குப்பதிவு தினத்தில், வாக்காளர்களை வரிசையில் நிற்க வைக்கும் போதும், கொரோனா தடுப்பு வழிகளை தேர்தல் ஆணையம் மனதில் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்த மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

இதுகுறித்து விளம்பரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News