செய்திகள்
கோப்புப்படம்

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.28 லட்சம் பறிமுதல்- வருமான வரித்துறை விசாரணை

Published On 2021-03-18 11:07 GMT   |   Update On 2021-03-18 11:07 GMT
நெல்லையில் தனியார் நிறுவன ஊழியரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.28 லட்சம் குறித்து வருமான வரித்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை:

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அப்போது ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்து செல்லப்பட்டதால் அதனை பறிமுதல் செய்து வருகின்றனர்.

நெல்லை தெற்கு புறவழிச்சாலை ரவுண்டான பகுதியில் டாஸ்மாக் மேலாளர் மோகன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக மேலப்பாளையத்தை சேர்ந்த மைதீன் (வயது30) என்பவர் சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது ரூ. 28 லட்சம் எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து பாளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடபாக தாசில்தார் செல்வன் தலைமையிலான அதிகாரிகள் மைதீனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும், நெல்லையில் உள்ள நிறுவனங்களில் பணத்தை வசூல் செய்து வங்கியில் செலுத்தும் பணியில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அந்த வகையில் தனியார் நிறுவனத்திடம் பெற்ற ரூ.28 லட்சத்தை ஸ்ரீபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். பறக்கும் படை சோதனையில் ரூ.10 லட்சம் பிடிபடும் பணங்கள் குறித்து தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதற்கு மேல் பிடிபடும் பணங்கள் குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.28 லட்சம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரி ஜான் தலைமையிலான அதிகாரிகள் பாளை தாலுகா அலுவலகத்திற்கு வந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.28 லட்சம் எங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது. எதற்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News