செய்திகள்
திருப்பூர் தெற்கு தொகுதி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த போது எடுத்தபடம்.

தேர்தல் பணி மேற்கொள்ளும் மண்டல அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி அவசியம் - மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு

Published On 2021-03-08 22:59 GMT   |   Update On 2021-03-08 22:59 GMT
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது
திருப்பூர்:

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆணையாளர் சிவகுமார் தலைமை தாங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு எந்திரங்களை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கும், வாக்கு எண்ணும் மையத்துக்கும் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான பணியையும் மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி வழித்தடம் மற்றும் வாக்குச்சாவடிகளின் அடிப்படை வசதிகளை முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு குழுவிலும் மண்டல அலுவலர், உதவி மண்டல அலுவலர் மற்றும் உதவியாளர் என 3 பேர் இடம் பெற்றுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இயக்குவது குறித்து அவசியம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். உலோக முத்திரை, பச்சை நிற முத்திரைத்தாள்கள், ரிசர்வ் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அழியாத மை பாட்டில்கள் மற்றும் வாக்காளர் பட்டியல்களை பத்திரமாக வைத்திருந்து வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

வாக்குப்பதிவுக்கு முன்தினம், வாக்குச்சாவடிக்கு தேவையான அனைத்து வகையான பொருட்களையும் கொண்டு சேர்ப்பது, வாக்குப்பதிவு நடத்துவது, வாக்குப்பதிவு முடிந்த பிறகு அனைத்து பொருட்களையும் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வந்து ஒப்படைப்பது வரையில் அனைத்து பணிகளையும் கவனமாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பயிற்சியின் போது உதவி ஆணையாளர்கள் சந்தானநாராயணன் (கணக்கு), வாசுகுமார், செல்வநாயகம், சுப்பிரமணியம், கண்ணன், நிர்வாக அதிகாரி செந்தில்குமார், முதன்மை பயிற்சி அதிகாரி மாரிமுத்து உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News