செய்திகள்
கவர்னர் பன்வாரிலால் புரோகித்

மாலைமலர் 15-வது பதிப்பு திருப்பூரில் தொடங்கியது... கவர்னர் வாழ்த்து

Published On 2021-02-25 10:08 GMT   |   Update On 2021-02-25 10:08 GMT
திருப்பூரில் மாலைமலர் 15-வது பதிப்பு இன்று தொடங்கப்படுவதையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை: 

திருப்பூரில் மாலைமலர் 15-வது பதிப்பு இன்று தொடங்கப்படுவதையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பல இடங்களில் செயல்பட்டு வரும் பழமையான தமிழ் நாளிதழான மாலைமலர் திருப்பூரில் தனது 15-வது பதிப்பை 25-ந் தேதி தொடங்குவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

பத்திரிகை என்பது ஜனநாயகத்தின் 4-வது தூணாக இருந்து நாட்டின் பல்வேறு வளர்ச்சிகளுக்கும், முன்னேற்றத்திற்கும் உதவுகிறது.

சமூகத்தின் மனசாட்சிகளை வெளிப்படுத்தும் ஒன்றாக அச்சு ஊடகங்கள் உள்ளன. எதற்கும் பயப்படாமல், யாருக்கும் சாதகமாக இல்லாமல், தைரியமாக தகவல்களை சொல்லும் நம்பகத்தன்மையான பத்திரிகைகளுக்கு வாசகர்களுடைய மனதில் தனி இடம் கிடைக்கிறது.

திருப்பூரில் புதிதாக தொடங்கப்படும் மாலைமலர் கொங்கு மண்டலத்தில் பெரும்பாலான மக்களால் வரவேற்கப்படும் பத்திரிகையாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

15-வது பதிப்பை தொடங்கும் மாலை பத்திரிகையான மாலைமலரின் எல்லா வகையான முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தொழில் அதிபர் வி.ஜி. சந்தோசம்:-

பத்திரிகை என்பது சமுதாயத்தின் கண்ணாடி என்று சொல்வார்கள். அத்தகைய சிறப்புமிக்க பத்திரிகை உலகில் இந்தியாவிலேயே நம்பர் 1 என்ற பெயரெடுத்து, நடத்திக் கொண்டிருக்கிற மாலைமலர் நாளிதழ் இன்று 15-வது அவதாரம் எடுத்திருக்கிறது.

துணிகளுக்கு பிரசித்தம் பெற்றது திருப்பூர். அந்த ஊரிலே மாலைமலர் 15-வது பதிப்பு வெளிவருவது பாராட்டுக்குரியது. மாலைமலர் உருவாகி, இந்த சமுதாயத்திற்கு அரசியல் விழிப்பு, கல்வியியல் துறையில் விரிவான பார்வை, இளைஞர்களுக்கு என்று பகுதி, பெண்களுக்கு என்று பகுதி என மிக அற்புதமாக தயாரித்து அளித்து வரும் மாலைமலர் இந்த பதிப்பிலும் அவையெல்லாம் உள்ளடக்கி, மக்கள் மனதில் இடம் பெறும் என்று நம்புகின்றேன். 15-வது மாலைமலர் வெளியீடு சிறந்த முறையில் நடைபெற எனது சார்பாகவும், வி.ஜி.பி. குழுமத்தின் சார்பாகவும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாகவும் வாழ்த்தி மாலைமலர் நாளிதழ் மேன்மேலும் சிறந்தோங்கிட என் உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News