செய்திகள்
கைது

ரூ.22½ கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு : பட்டாசு நிறுவன பங்குதாரர் கைது

Published On 2021-02-18 21:54 GMT   |   Update On 2021-02-18 21:54 GMT
2017-ம் ஆண்டில் இருந்து கடந்த வருடம் வரை சுமார் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்த பட்டாசு நிறுவன பங்குதாரரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:

கோவையில் உள்ள ஜி.எஸ்.டி. வரி புலனாய்வு மண்டல கூடுதல் இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிவகாசியை சேர்ந்த பட்டாசு உற்பத்தி நிறுவனம் (காரனேசன்) கடந்த 5 வருடங்களாக வரி ஏய்ப்பு செய்து வந்தது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து, மதுரையில் உள்ள ஜி.எஸ்.டி. வரி புலனாய்வு பிராந்திய அலுவலகத்தின் சார்பில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு பகுதிகளிலும் புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், கடந்த 2016-17-ம் ஆண்டில் மட்டும் அந்த நிறுவனம் சுமார் ரூ.2½ கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் விற்பனை கணக்குகள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அதில், கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து கடந்த வருடம் வரை சுமார் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. அதாவது, ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்களை ரகசிய குறியீடாக வைத்து, உள்ளூரில் ஹவாலா மோசடியில் அந்த பட்டாசு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக கமிஷன் ஏஜெண்டுகள் இந்த நிறுவனம் வியாபாரம் செய்யும் கடைகளிடம் சென்று ரொக்கப்பணத்தை வசூலித்துள்ளனர். விற்பனை செய்ததாக குறிப்பிட்டுள்ள பில் தொகைக்கு மாறாக இந்த பணம் முறைகேடாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவரை, புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர், மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News