செய்திகள்
உயிரிழந்த காளை

மாடு விடும் விழாவில் முதல் பரிசுகளை வென்ற காளை ஆபரே‌ஷன் பலனின்றி பலி

Published On 2021-01-21 09:14 GMT   |   Update On 2021-01-21 09:14 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே மாடு விடும் விழாவில் முதல் பரிசுகளை வென்ற காளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள காவலூரை சேர்ந்த அண்ணாமலை என்பவர் "செண்பகதோப்பு டான்" என்கிற காளை ஒன்றை வளர்த்து வந்தார்.

கடந்து ஆண்டு மட்டும் 6 கிராமங்களில் நடைபெற்ற போட்டியில் இந்த காளை பங்கேற்று முதல் பரிசு பெற்றது. கடந்த 14-ந்தேதி அணைக்கட்டில் நடைபெற்ற எருதுவிடும் விழாவிற்கு அண்ணாமலை காளையை அழைத்து சென்றார். அப்போது பந்தயத்திற்கு முன்பாக அணைக்கட்டில் சாலையில் சென்று கொண்டிருந்த காளை மீது மினி லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த காளையின் இடது பக்கம் பகுதியில் உள்ள 2 விலா எலும்பு முறிந்து, வயிற்றுப் பகுதி கிழிந்து குடல் மற்றும் அசையூண் இரைப்பை வெளியே சரிந்தது. மேலும் அதிகமான ரத்த போக்கு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து காளைக்கு வேலூர் அரசு கால்நடை மருத்துவமனையில் 7 மணி நேரம் ஆபரே‌ஷன் செய்து சிகிச்சை அளித்தனர்.

இந்த அறுவை சிகிச்சையில் காளைக்கு மயக்க மருத்து அளிக்கப்பட்டு விலா எலும்பு பிளேட் வைத்து இணைக்கப்பட்டது, மேலும் வெளியே சரிந்த குடல் மற்றும் அசையூண் இரைப்பை பகுதியை மீண்டும் வயிற்றுப் பகுதியில் முறையாக வைத்து தைத்தனர்‌. அறுவை சிகிச்சை முடிந்து காளை சீராக இருந்தது.

இந்த நிலையில் ஆபரேசன் பலனின்றி காளை நேற்று உயிரிழந்தது. இதனால் வேதனை அடைந்த அப்பகுதி பொதுமக்களும், உரிமையாளரும் காளைக்கு மாலை அணிவித்து கதறி அழுதனர். பின்னர் காளையை ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News