செய்திகள்
புகார்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை மாற்றப்பட்டதா?- ஆம்புலன்ஸ் டிரைவர் புகார்

Published On 2021-01-09 09:56 GMT   |   Update On 2021-01-09 09:56 GMT
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை மாற்றப்பட்டதாக ஆம்புலன்ஸ் டிரைவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே உள்ள சக்கரக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மைனர் (வயது 33) ஆம்புலன்ஸ் டிரைவர்.

இவரது மனைவி நாகலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த மாதம் 14-ந்தேதி சேர்க்கப்பட்டார்.

அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் 18-ந்தேதி ஆண் குழந்தை பிறந்ததாக முதலில் கூறப்பட்டது. சிறிது நேரம் கழித்து பெண் குழந்தை பிறந்ததாக மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மைனர், பிரசவ சிகிச்சை பிரிவிலிருந்த ஊழியர்களிடம் கேட்டார். அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. அதன் பின்னர் குழந்தையையும், மனைவியையும் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்.

இந்த நிலையில், மைனரின் வீட்டுக்கு செவிலியர் என்ற பெயரில் கடிதம் வந்தது. அதில், அவரது ஆண் குழந்தை மாற்றப்பட்டதாகவும், அதே நாளில் மற்றொருவருக்குப் பிறந்த பெண் குழந்தையை அவரது மனைவிக்குப் பிறந்ததாக சிகிச்சைப் பிரிவிலிருந்த செவிலியர் மாற்றியதாகவும், அதன்படி ஆவணங்களையும் அவர் திருத்தியதாகவும், மரபணுச் சோதனை மூலம் உண்மை வெளிப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து விசாரணை நடத்தவும், குழந்தைக்கு மரபணு சோதனை நடத்தவும் கோரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில், மைனர் புகார் செய்தார்.

இது தொடர்பாக பிரசவ சிகிச்சை பிரிவு ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

டீன் அல்லி கூறுகையில், இது சம்பந்தமாக புகார் எதுவும் எனக்கு வரவில்லை. அதுபோல் நடக்க வாய்ப்பு இல்லை. அப்படி நடந்திருந்தால் அதனை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டுபிடித்து விடலாம் என்றார்.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைக்கு இணையாக அனைத்து வசதிகளும் கிடைப்பதால் பெண்கள் பிரசவ காலங்களில் அரசு தலைமை மருத்துவமனையை நாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவரின் குழந்தை மாற்றப்பட்டதாக செய்தி வெளியாகி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News