செய்திகள்
கோப்புபடம்

நன்னிலம் அருகே வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் சாலைமறியல் - 75 பேர் கைது

Published On 2021-01-04 12:15 GMT   |   Update On 2021-01-04 12:15 GMT
நன்னிலம் அருகே வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேவேந்திரகுல வேளாளர் பிரதிநிதிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேவேந்திர குல சமுதாயத்தை சேர்ந்த பிரதிநிதிகள் என்னை சந்தித்து தேவேந்திர குல சமுதாய மக்கள் பலபிரிவுகளாக பிரிந்திருக்கின்றனர். அந்த பிரிவுகளை ஒன்றாக சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அழைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இந்திய ஆட்சிபணி மூத்த அலுவலர்கள் தலைமையிலான குழு இந்த சமூகத்தை சேர்ந்த 7 பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பொது பெயராக வைத்திட அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த பரிந்துரை அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளேன். அதற்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும். எனவே உங்களுக்கு சட்டப்படி தேவேந்திரகுல வேளாளர் என்ற அந்தஸ்து கிடைக்கும் என்ற செய்தியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

இந்தநிலையில் பட்டியல் இன மக்களுக்கு வெள்ளாளர் சமுகத்தவரின் பெயரை பரிந்துரை செய்த முதல்-அமைச்சரை கண்டித்தும், பரிந்துரையை ரத்து செய்ய கோரியும் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நன்னிலம் அருகே உள்ள சன்னாநல்லூர் கடைத்தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில இளைஞரணி செயலாளர் ராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். அதனை தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலால் அப்பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்ட 75 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News