செய்திகள்
ஆரணி ஆற்றில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலை வழியாக வாகனங்கள் செல்வதை காணலாம்

ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் தற்காலிக சாலை அமைப்பு

Published On 2020-12-26 06:15 GMT   |   Update On 2020-12-26 06:15 GMT
ஊத்துக்கோட்டையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல அனுமதிக்கப்பட்டதால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஊத்துக்கோட்டை:

‘நிவர்’புயல் காரணமாக ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் உள்ள ஆரணியார் அணை நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அணை முழுவதுமாக நிரம்பியதையடுத்து, கடந்த மாதம் 25-ந் தேதி ஆரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் மற்றும் இதர பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம் அருகே ரூ.28 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய பாலம் மீது தற்காலிக படிகள் அமைத்து பொதுமக்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் பொதுமக்களின் வசதிக்காக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தின் கிழக்கு திசையில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. இதன் வழியாக நேற்று காலை மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. கனரக வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பின்னர், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதால் சிரமம் அடைந்து வந்த பொதுமக்கள் பெருமூச்சு விட்டனர். ஆரணி ஆற்றில் வடக்கு திசையில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. வெள்ளம் முழுவதுமாக வடிந்த பிறகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப் பாலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரவி, உதவி கோட்ட பொறியாளர் சிவக்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News