செய்திகள்
அமைச்சர் காமராஜ்

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்- அமைச்சர் காமராஜ்

Published On 2020-12-12 10:21 GMT   |   Update On 2020-12-12 10:21 GMT
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
கொரடாச்சேரி:

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் உத்திரங்குடி, கீழப்பாலையூர் ஆகிய இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது விரைவில் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். மழைநீரால் சூழப்பட்ட சம்பா, தாளடி பயிர்களை பாதுகாக்கும் வகையில் விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இடுபொருட்கள் குறித்தும் வேளாண் அலுவலர்கள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் புயல் மற்றும் கனமழை காரணமாக சம்பா, தாளடி உள்ளிட்ட நெற்பயிர்கள் மழைநீரால் சூழ்ந்து பாதிப்புள்ளாகியுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 2,22,120 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. 1,35,590 விவசாயிகள் தங்களது 3,96,675 ஏக்கர் நெற்பயிருக்கு காப்பீடு செய்துள்ளனர். அந்த காப்பீட்டிற்கான தொகையினை பெற்று தருவதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்.

தமிழக முதல்-அமைச்சர் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நி்வாரணம் வழங்கப்படும். இ்வ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது ஒன்றியக்குழு உறுப்பினர் டி.வி.பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், மணிமாறன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் குடவாசல் ஒன்றியம் மஞ்சகுடி ஊராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களையும், குடியிருப்புகளையும் அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் குறைகள் கேட்டார். ஆய்வின்போது உதவி கலெக்டர் பாலச்சந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஹேமா ஹெப்சியா நிர்மலா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சந்தானம், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, தாசில்தார் ராஜன்பாபு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாப்பா சுப்ரமணியன், மாவட்ட த.மா.கா. தலைவர் குடவாசல் தினகரன், ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில், ஊராட்சி தலைவர் வனிதா கண்ணதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News