செய்திகள்
கோப்புப்படம்

தூத்துக்குடியில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் 2-வது நாளாக சாலை மறியல்

Published On 2020-12-08 08:54 GMT   |   Update On 2020-12-08 08:54 GMT
தூத்துக்குடி பகுதியில் தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்றக்கோரி பொதுமக்கள் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநகரில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. சில இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

இதைத்தொடர்ந்து செயின்ட் மேரீஸ் காலனி பகுதியில் தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இன்று காலையில் பெய்த கனமழை காரணமாக மீண்டும் செயின்ட் மேரீஸ் காலனி பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் அங்கு இன்று 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையறிந்த வடபாகம் போலீசார் அங்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் பகுதியில் சாக்கடை கழிவுநீருடன் மழைநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் அதனை சீரமைக்கவேண்டும் என கூறினர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News