செய்திகள்
தர்மபுரி கலெக்டர் கார்த்திகா

44 ஊராட்சிகளில் சாம்பல் நீர் மேலாண்மை திட்டம் - தர்மபுரி கலெக்டர் கார்த்திகா தகவல்

Published On 2020-11-16 06:43 GMT   |   Update On 2020-11-16 06:43 GMT
தர்மபுரி மாவட்டத்தில் 42 ஊராட்சிகளில் சாம்பல் நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று பணியாளர்களுக்கான பயிற்சி முகாமில் கலெக்டர் கார்த்திகா தெரிவித்தார்.
தர்மபுரி:

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், சமையல் அறை மற்றும் குளியலறை கழிவு நீரான சாம்பல் நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்கான கணக்கெடுப்பு செய்தல், சமுதாய வரைபடம் தயாரித்தல் மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்த பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமை கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத நிலையை தக்க வைப்பதுடன் திட, திரவ கழிவு மேலாண்மையை உறுதி செய்வதே ஒட்டுமொத்த தூய்மைக்கான நடவடிக்கையாகும். சமையலறை மற்றும் குளியலறை கழிவுநீரான சாம்பல் நீரை தெருக்கள் மற்றும் வீடுகள் முன்பு தேங்காத வகையில் தனிநபர் மற்றும் சமுதாய உறிஞ்சு குழி மூலம் பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.

இந்த திட்டம் மத்திய மற்றும் மாநில அரசு நிதி மூலமாக தூய்மை பாரத இயக்கம் 2020-2021-ன் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் 44 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான தொழிநுட்ப வழிமுறைகளை சம்பந்தப்பட்ட பணியாளர்கள் முறையாக தெரிந்து கொண்டு பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கார்த்திகா பேசினார்.

இந்த பயிற்சி முகாமில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரங்கராஜன், உதவி திட்ட அலுவலர் உஷாராணி, உதவி செயற்பொறியாளர் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ஆறுமுகம், வடிவேலன், மகாலிங்கம், உதவிப் பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், அனைத்து வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News