செய்திகள்
பணம் பறிமுதல்

மோட்டார் வாகன சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

Published On 2020-11-09 02:08 GMT   |   Update On 2020-11-09 02:08 GMT
கும்மிடிப்பூண்டி அருகே போக்குவரத்து மோட்டார் வாகன சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் 6 மணி நேரம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் சிக்கியது.
கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இது அனைத்து துறைகளுக்கான சோதனைச்சாவடி என்றாலும், தற்போது இங்கு போக்குவரத்து மோட்டார் வாகன சோதனைச்சாவடிகள் மற்றும் போலீசாரின் வாகன தணிக்கை சோதனைச்சாவடி போன்றவை மட்டுமே முழுமையாக இயங்கி வருகிறது. அந்த வகையில், போக்குவரத்து மோட்டார் வாகன சோதனைச்சாவடிகளில் ஒருபுறம் ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களுக்குரிய சோதனைச்சாவடியும், அதேபோல் ஆந்திராவுக்குள் செல்லும் வாகனங்களுக்கான மற்றொரு சோதனைச்சாவடியும் உள்ளது.

இந்த சோதனைச்சாவடிகளில் நேற்று அதிகாலை 3 மணி முதல் காலை 9 மணி வரை தொடர்ந்து 6 மணி நேரம் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு குமரவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், அண்ணாதுரை, நாகலட்சுமி, கீதா மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது 2 சோதனைச்சாவடிகளிலும் சேர்த்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைப்பற்றினர்.

சோதனையின்போது பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 2 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறையினர் பரிந்துரை செய்தனர்
Tags:    

Similar News