செய்திகள்
செவ்வந்தி பூக்கள்

கூடலூர் பகுதியில் செவ்வந்தி பூக்கள் விளைச்சல் அமோகம்

Published On 2020-10-12 09:48 GMT   |   Update On 2020-10-12 09:48 GMT
கூடலூர் பகுதியில் அவ்வப்போது பெய்த மழையால் செவ்வந்தி பூக்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது.
கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான மந்தைவாய்க்கால், காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு, காக்கானோடை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் செவ்வந்தி பூக்களை அதிக அளவு சாகுபடி செய்துள்ளனர். கடந்த மாதம் இதற்கான நடவுப்பணிகள் நடைபெற்றது. 

இதற்கிடையே அவ்வப்போது பெய்த மழையால் செவ்வந்தி செடிகள் நன்கு வளர்ந்து, தற்போது அவற்றில் பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன. அவ்வாறு பூத்துக்குலுங்கும் செவ்வந்தி பூக்களை விவசாயிகள் பறித்து, கம்பம், மதுரை பூமார்க்கெட்டிற்கு கொண்டுபோய் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் வியாபாரிகளும் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ செவ்வந்திப்பூ ரூ.100 முதல் ரூ.120 வரை என கொள்முதல் செய்கிறார்கள்.

இந்தநிலையில் தற்போது கூடலூர் பகுதியில் செவ்வந்தி பூக்கள் நன்கு விளைச்சல் அடைந்துள்ளதால் விரைவில் வரவுள்ள ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விழாக்காலத்தில் பூக்கள் விற்பனை மூலம் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் ஆயுதபூஜையின்போது செவ்வந்தி பூக்களின் தேவை அதிகரிக்கும். அதன்மூலம் தங்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News