செய்திகள்
உயர் நீதிமன்ற மதுரை கிளை

தொல்லியல் பட்டயப் படிப்பில் தமிழ் புறக்கணிப்பு- உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

Published On 2020-10-08 06:19 GMT   |   Update On 2020-10-08 13:50 GMT
மத்திய அரசின் தொல்லியல் துறை சார்ந்த பட்டயப்படிப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது.
மதுரை:

மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வருகின்றது. இந்நிறுவனம், தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கான அறிவிப்பை வெளியிட்டு, முதுகலைப் பட்டம் பெற்று இருப்போர் விண்ணப்பிக்கலாம் என்று செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தது.

இந்திய வரலாறு. தொல்லியல்துறை, மானிடவியல் மற்றும் செம்மொழிகளான சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம் மற்றும் அரபு மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டு இருக்கின்றது. ஆனால் செம்மொழியான தமிழ் மொழி இடம்பெறவில்லை. இதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலைப் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில், தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று முறையீடு செய்யப்பட்டது. மத்திய தொல்லியில் பட்டயப்படிப்பு விவகாரத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும், பழைய அறிவிப்பை ரத்து செய்து செம்மொழி வரிசையில் தமிழை சேர்த்து அறிவிப்பு வெளியிட  வேண்டும் என்றும் மனுதாரர் கூறினார். 

இந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் நாளை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து மனுவாக தாக்கல் செய்யப்பட உள்ளது.
Tags:    

Similar News