செய்திகள்
சி.பா.ஆதித்தனார்

இன்று 116-வது பிறந்தநாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தலைவர்கள் மரியாதை அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது

Published On 2020-09-27 01:35 GMT   |   Update On 2020-09-27 01:35 GMT
சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
சென்னை:

சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். தமிழக அரசு சார்பில் அமைச்சர்களும் மரியாதை செலுத்துகின்றனர்.

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

கடந்த ஆண்டு முதல், சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு தமிழ் அறிஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர்.

தமிழக அரசு சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பாண்டியராஜன், பென்ஜமின், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் உள்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
Tags:    

Similar News