செய்திகள்
மனைவிக்கு சிலை அமைத்த தொழில் அதிபர்

மதுரையில் மனைவிக்கு சிலை அமைத்த தொழில் அதிபர்

Published On 2020-09-12 00:34 GMT   |   Update On 2020-09-12 00:34 GMT
மதுரையில் மனைவிக்கு தொழில் அதிபர் சிலை அமைத்து இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:

மதுரை மேலப்பொன்னகரம் 7-வது தெருவை சேர்ந்தவர், சேதுராமன் (வயது 74). இவரது மனைவி பிச்சைமணி (67). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் கனிமொழியின் கணவர் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.வான டாக்டர் சரவணன் ஆவார்.

சேதுராமனுக்கு திருமணம் முடிந்து 48 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 10-ந்தேதி உடல்நலக்குறைவால் திடீரென்று பிச்சைமணி இறந்து போனார். எனவே மனைவியின் நினைவாக சேதுராமன் தனது வீட்டில், பிச்சைமணியின் உருவச்சிலையை தத்ரூபமாக அமைத்துள்ளார். தனது மனைவி இறந்த 30 நாட்களில் இந்த சிலையை அமைத்திருப்பது நெகிழ்ச்சியை தருவதாகும்.

இது குறித்து சேதுராமன் கூறியதாவது:-

திருமணத்துக்கு பின்பு எனது மனைவியை பிரிந்தது இல்லை. கடந்த மாதம் அவர் இறந்தது எனது மனதை வெகுவாக பாதித்தது. அவர் இப்போது என்னுடன் இல்லை என்றாலும் அவரது நினைவுகளுடன் வரும் காலத்தை கழிக்க முடிவு செய்துள்ளேன். இது சம்பந்தமாக பலரிடம் ஆலோசனை பெற்று, மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சிற்பி பிரசன்னாவை அணுகினேன். அவர் எனது மனைவியின் பல்வேறு போட்டோக்களை பெற்று, 22 நாட்களில் பைபர் மெட்டீரியல் மூலம் புதிய தொழில்நுட்பத்தில் சிலையை தத்ரூபமாக உருவாக்கி கொடுத்தார். நாற்காலியில் என் மனைவி அமர்ந்து இருப்பது போன்று இந்த சிலை உள்ளது.

இப்போது இளைய சமுதாயத்தினரிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லை. இளைய சமூகத்தினர் கணவன்-மனைவியின் புனித உறவு குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இந்த காலத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவரது நினைவுகளை சிறிது நாட்களிலேயே மறந்துவிடுகின்றனர். ஆனால் நான் உயிருடன் இருக்கும் வரை எனது மனைவியின் நினைவுகளுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலையாக அவரை வடிவமைத்து வீட்டில் வைத்து காலத்தை கழிக்க உள்ளேன். அந்த சிலையை பார்க்கும் போதெல்லாம் என் மனைவி பிச்சைமணி என்னுடன் இருப்பது போலவே உணர்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News