செய்திகள்
நித்யானந்தா

கைலாசா நாட்டில் தொழில் தொடங்க மதுரைக்காரர்களுக்கு முன்னுரிமை: நித்யானந்தா உருக்கம்

Published On 2020-08-25 03:02 GMT   |   Update On 2020-08-25 03:02 GMT
மதுரையை சேர்ந்தவர்களுக்கு தனது கைலாசா நாட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சுவாமி நித்யானந்தா உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
மதுரை :

கைலாசா என்ற தனிநாட்டை நித்யானந்தா உருவாக்கி சர்ச்சை ஏற்படுத்தி வருகிறார். மேலும் அவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தோன்றி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தனது நாட்டின் பொருளாதார மேம்பாட்டு அறிவிப்பாக கைலாசா நாட்டிற்கான புதிய நாணயங்கள் மற்றும் பணத்தை விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெளியிட்டார். அதில் கைலாசா நாட்டின் நாணயங்களாக பொற்காசுகள் தான் இருக்கும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே மதுரை டெம்பிள்சிட்டி ஓட்டல் உரிமையாளர் குமார், நித்யானந்தாவிற்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டார். அந்த கடிதத்தில் கைலாசா நாட்டில் ஓட்டல் வைக்க அனுமதி வேண்டும் என்று நித்யானந்தாவிடம் கோரியிருந்தார். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த தகவல் பரவ தொடங்கிய சில மணி நேரத்திலேயே நித்யானந்தா இணையதளத்தில் நேரலை மூலம் தோன்றி பேசினார். அப்போது மதுரை ஓட்டல் அதிபர் குமார் தனது நாட்டில் தொழில் தொடங்க அனுமதி கேட்டுள்ளார். அதற்கு முன்னுரிமை அளிக்க கைலாசா நாட்டை நிர்வகிக்கும் சன்னியாசிகளுக்கு உத்தரவிடுகிறேன். எங்கள் நாட்டில் தொழில் தொடங்கும் போது உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். மதுரை ஓட்டல் அதிபர் எழுதிய கடிதத்தை பார்த்தேன். அதற்காக தான் நேரலையில் இந்த தகவலை தெரிவிக்கிறேன்.

மேலும் தனது நாட்டு பொருளாதார வணிக செயல்பாடுகளில் மதுரை, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்குமாறு சட்டத்தில் வைத்து விடுகிறேன். எனது உடலில் உள்ள ரத்தம், உயிர் ஆகியவை இந்த 3 ஊர்க்காரர்கள் போட்ட பிச்சை. நான் என்னென்றும் இந்த மூன்று ஊர்காரர்களுக்கு கடமைப்பட்டு இருப்பேன். நான் சொத்துக்காக மதுரைக்கு வரவில்லை. அம்மா மீனாட்சி மீது வைத்துள்ள பக்திக்காக தான் வந்தேன். தான் இறந்த பிறகு தனது சொத்தை மதுரை, திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு அளிக்க உயில் எழுதி வைத்துள்ளேன். மேலும் மீனாட்சி அம்மன் வாழ்ந்த மதுரையில் உயிரிழக்க வேண்டும் என்பதால் தான் வந்தேன்.

மதுரை, திருவண்ணாமலை ஆகிய ஊரை சேர்ந்தவர்கள் நான் உயிரோடு இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும் நான் திருவண்ணாமலை அடிவாரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கண்காணிப்பு கேமரா வைத்து தினமும் தரிசனம் செய்து வருகிறேன். ஆனால் கண்காணிப்பு கேமரா சிக்னலை வைத்து கைலாசாவை கண்டுபிடிக்கலாம் என முயற்சிக்க வேண்டாம். அப்படி கண்டுபிடிக்க இயலாது.

தான் உயிரிழந்த பின் தனது உடலை திருவண்ணாமலை மலையையும், மீனாட்சி அம்மன் கோவிலையும் சுற்றி கொண்டு வந்த பின்னரே புதைக்க வேண்டும். கைலாசா நாட்டிற்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் நிச்சயமாக தொழில் தொடங்க கோரிக்கை விடுத்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

இவ்வாறு நித்யானந்தா வீடியோவில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News