செய்திகள்
கைது

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக கைதானவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது

Published On 2020-07-12 09:25 GMT   |   Update On 2020-07-12 09:25 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக கைதானவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
விழுப்புரம்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தற்போது 6-ம் கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஊரடங்கை மீறி சாலைகளில் தேவையில்லாமல் நடந்தோ, இருசக்கர வாகனங்களிலோ சுற்றித்திரிபவர்களையும் மற்றும் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் செல்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றனர். அவ்வாறு ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் கைது செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 29,158 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 29,700 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான இவர்களிடம் இருந்து 619 கார்கள், 379 ஆட்டோக்கள், 15,900 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 16,898 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டத்தில் நேற்றும் அரசு விதிகளை பின்பற்றாமல் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக கைதானவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் போலீசார் தொடர்ந்து தினந்தோறும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News