செய்திகள்
இறந்த மயிலுக்கு தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்திய போலீசார்

இறந்த மயிலுக்கு தேசிய கொடி போர்த்தி மரியாதை செய்த விவகாரம் - போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

Published On 2020-07-06 11:10 GMT   |   Update On 2020-07-06 11:10 GMT
மின்சாரம் தாக்கி இறந்த மயிலுக்கு, போலீசார் தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்திய விவகாரம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை:

கோவை திருச்சி ரோட்டில் இருந்து எஸ்.ஐ.எச்.எஸ். காலனிக்கு செல்லும் வழியில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இந்த பகுதியில் நேற்று ஒரு மயில் பறந்து வந்தது. அந்த மயில் அங்கிருந்த ஒரு டிரான்ஸ்பார்மரில் உள்ள உயர் அழுத்த மின் கம்பியில் அமர்ந்தது. அப்போது திடீரென்று அந்த மயில் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அந்த மயில் கருகி இறந்தது.

இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து அங்கு தொங்கிய மயிலின் உடல் மீட்கப்பட்டது. இறந்தது பெண் மயில் ஆகும். மயில் தேசிய பறவை என்பதால் இறந்த மயிலின் உடல் மீது போலீசார் தேசிய கொடியை போர்த்தி அதற்கு உரிய மரியாதை செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து மயில் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.  

இந்நிலையில் இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.  இதனையடித்து உயிரிழந்தது நாட்டின் தேசியப் பறவை என்றாலும் தேசியக் கொடியை போர்த்தியது தவறு என்றும், அப்படியே செய்திருப்பினும் தகுந்த முறையில் மயிலை பெட்டியினுள் வைத்த பின்பு முறையாக தேசிய கொடியை பெட்டியின் மேல் போர்த்தியிருக்க வேண்டும்.

அதை விடுத்து, சாலையில் இறந்த மயிலின் சடலத்தின் மேல் தேசியக் கொடியை போர்த்தி, பின்னர் அந்த கொடியோடு மயிலின் உடலை சுற்றி சாக்குப்பையில் போட்டு வனத்துறையிடம் ஒப்படைத்ததும் சட்டத்தின் விதிமீறிய செயல் என சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கையை அளிக்குமாறு, கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

மேலும் இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் சம்மந்தப்பட்ட போலீசாரை அழைத்து இதுபோல் செய்யக்கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News