செய்திகள்
கூண்டில் சிக்கிய கரடி

கடையம் அருகே மேலும் ஒரு கரடி கூண்டில் சிக்கியது

Published On 2020-07-04 11:05 GMT   |   Update On 2020-07-04 11:05 GMT
கடையம் அருகே மேலும் ஒரு கரடி கூண்டில் சிக்கியதையடுத்து, இப்பகுதியில் பிடிப்பட்ட கரடிகளின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்து உள்ளது.
தென்காசி:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடையம் வனச்சரக பகுதிகளான பெத்தான் பிள்ளை குடியிருப்பு, சிவசைலம், அழகப்பபுரம், முதலியார்பட்டி, பங்களா குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக கரடிகள் உணவுக்காக ஊருக்குள் வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் சுற்றித்திரிந்த 8 கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்றும் ஒரு கரடி கூண்டில் சிக்கி உள்ளது. கடையம் அருகே உள்ள வடமலைசமுத்திரம் டாக்டர் மகபூப் தோட்டத்தில் வைக்கப்பட்ட கூண்டில் ஒரு கரடி சிக்கியது. இதனால் இந்த பகுதியில் பிடிப்பட்ட கரடிகளின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்து உள்ளது. தொடர்ந்து வரும் கரடிகளால் அப்பகுதி மக்களிடையே ஒரு வித அச்சம் ஏற்பட்டு உள்ளது.

கரடிகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பிடிபட்ட கரடி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.
Tags:    

Similar News