செய்திகள்
கைது

டிக்-டாக்கில் பழகி ரூ.1 லட்சத்தை இழந்த வாலிபர்: திருப்பூர் பெண் கைது

Published On 2020-06-09 08:29 GMT   |   Update On 2020-06-09 08:29 GMT
டிக்-டாக் மூலம் நண்பராக அறிமுகமாகி மதுரை வாலிபரிடம் ரூ. 1 லட்சத்தை மோசடி செய்த திருப்பூர் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:

மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 24). இவர் பொழுது போக்குக்காக செல்போனில் டிக்-டாக் செயலியை பயன்படுத்தினார்.

இதன் மூலம் திருப்பூரைச் சேர்ந்த சுசி என்ற அம்முக்குட்டி அறிமுகமானார். நன்றாக பழகிய அவர், தனது குடும்பத்தின் கஷ்டத்தை ராமச்சந்திரனிடம் கூறி அவ்வப்போது பணம் கேட்டுள்ளார்.

இதை நம்பிய வாலிபர், சுசியின் வங்கி கணக்கில் ரூ. 97 ஆயிரம் வரை அனுப்பினார். பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் டிக்-டாக் மற்றும் முகநூலில் சுசி வரவில்லை. அவரது செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

சந்தேகத்தின் பேரில் சுசியின் டிக்-டாக் மற்றும் முகநூல் கணக்கை ஆய்வு செய்தபோது அது போலி யானது என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து ராமச்சந்திரன் மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி சுசியை கைது செய்தனர்.

ஆடம்பரமாக வாழ நினைத்த சுசி, பல ஆண்களுடன் டிக்-டாக்கில் பழகி அதிக அளவில் பணத்தை கறந்துள்ளார். விசாரணைக்கு பிறகு சுசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோன்று மதுரை எஸ்.எஸ்.காலனியில் கடந்த வாரம் முகநூல் மூலம் நண்பராக அறிமுகமாகி முதியவரிடம் ரூ. 2.70 லட்சம் மோசடி செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News