செய்திகள்
சட்டசபை முற்றுகை போராட்டத்திற்காக திரண்டவர்கள்.

சென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை

Published On 2020-02-19 07:42 GMT   |   Update On 2020-02-19 09:38 GMT
சென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் இன்று சேப்பாக்கத்தில் பேரணி நடத்தினர். ஐகோர்ட் தடை இருந்ததால் சட்டசபையை முற்றுகையிடாமல் பேரணியை நிறைவு செய்தனர்.
சென்னை:

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் கடந்த 14-ந்தேதி முஸ்லிம்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்கள். அப்போது கல்வீச்சு-தடியடியும் நடத்தப்பட்டது.

இன்று 6-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இரவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் இயற்ற வேண்டும் என்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை இன்று முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்திருந்தனர்.

இந்த போராட்டத்துக்கு எதிராக இந்திய மக்கள் மன்றத்தின் தலைவரான வாராகி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், தலைமை செயலக முற்றுகை போராட்டத்துக்கு மார்ச் 11-ந்தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டனர்.

மார்ச் 12-ந்தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள் அதற்குள் போலீசாரும், சம்பந்தப்பட்ட முஸ்லிம் அமைப்புகளும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். யாரும் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்றும், தடையை மீறி போராட்டம் நடத்தினால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று இரவு உடனடியாக முஸ்லிம் அமைப்பினர் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். அதில் திட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இன்று காலை 10 மணி அளவில் 22 முஸ்லிம் அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

சேப்பாக்கம் கலைவாணர் அரங்கம் அருகில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவதற்காக திரண்டனர்.

தடையை மீறி தலைமைச் செயலகத்தை நோக்கி போராட்டக்காரர்கள் சென்றனர்.  தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க போலீசார்  தயாரானார்கள். தலைமை செயலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 6 மணியில் இருந்தே 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மெரினா கடற்கரை சாலை, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, நேப்பியர் பாலம், தீவுத்திடல், சிவானந்தா சாலை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் அங்கு குவிந்து இருந்தனர். சேப்பாக்கத்தில் மட்டும் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

தலைமை செயலகத்தை நோக்கி செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.

சென்னையில் நடந்த போராட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 22 அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காலை 8 மணி முதலே வரத் தொடங்கினார்கள். சேப்பாக்கத்தில் போராட்டம் நடைபெறும் இடத்தில் 2 லாரிகளை அருகருகே நிறுத்தி சிறிய மேடை போன்று அமைக்கப்பட்டு இருந்தது.

குடியுரிமை திருத்த சட்டத்தை நிராகரிப்போம், என்.பி.ஆர். கணக்கெடுப்பை நடத்த விட மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டசபை நோக்கி பேரணி- முற்றுகை போராட்டம் என பொறிக்கப்பட்ட பேனர் கட்டப்பட்டு இருந்தது.

மண்ணின் மைந்தர்கள் நாங்கள் அகதிகள் அல்ல என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது.

இதற்கிடையே சேப்பாக்கத்தில் போராட்டம் நடைபெற இருந்த இடத்தில் முஸ்லிம்கள் திரண்டனர். அப்போது மேடையில் இருந்த ஒலிபெருக்கி மூலம் அனைவரும் கலைவாணர் அரங்கம் முன்பு கூடுங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.



இதையடுத்து சற்று தொலைவில் உள்ள கலைவாணர் அரங்கம் அருகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் திரண்டனர். அவர்களுக்கு முன்பு தடுப்பு அரண்போல நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். போலீசார் கையில் லத்தி மற்றும் தடுப்பு கவசம் வைத்து இருந்தனர்.

10.30 மணி அளவில் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்துக்கு முன்பு போலீசார் அணிவகுத்து வந்தனர். சேப்பாக்கம் மைதானம் அருகே மேடை இருந்த இடத்திலும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. அதில் ஒரு காவல் கட்டுப்பாட்டு அறையும், ஒரு புறக்காவல் நிலையமும் திறக்கப்பட்டு இருந்தது.

கேமராக்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் 5-க்கும் மேற்பட்ட டிரோன் கேமராக்கள் மூலம் போராட்டக்காரர்கள் கண்காணிக்கப்பட்டனர்.

எனவே, தடையை மீறி கலைவாணர் அரங்கில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியானது, சேப்பாக்கத்தில் நிறைவடைந்தது. ஐகோர்ட் தடை இருந்ததால் சட்டசபையை முற்றுகையிடுவதற்காக அங்கிருந்து செல்லவில்லை.

முன்னதாக 9.50 மணி அளவில் போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு நேரில் வந்து முன்னணி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

கூடுதல் கமி‌ஷனர் பிரேமானந்த் சின்கா, துணை கமி‌ஷனர்கள் தர்மராஜன், பிரபாகர், பகலவன், கலைச் செல்வன், தசாங்சாய், உதவி கமி‌ஷனர்கள் முத்துவேல் பாண்டி, சரவண மற்றும் ஏராளமான போலீஸ் இன்ஸ் பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News