செய்திகள்
பூண்டி ஏரி

சென்னையில் குடிநீர் சப்ளை 650 மில்லியன் லிட்டராக அதிகரிப்பு

Published On 2019-10-23 07:52 GMT   |   Update On 2019-10-23 07:52 GMT
சென்னை நகருக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் 525 மில்லியன் லிட்டர் குடிநீரின் அளவு இன்று முதல் 650 மில்லியன் லிட்டர் அளவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை பெருநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் அனைத்து நீர் தேக்கங்களும், கடந்த மூன்று ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததன் காரணமாக வறண்ட நிலையில் இருந்து வந்தது. மேலும், பருவமழையை நம்பியே சென்னையிலுள்ள குடிநீர் வழங்கும் நீர் நிலைகள் உள்ளன.

சென்னை நகரின் குடிநீர் வழங்கலை சீராக்க தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கிருஷ்ணா நீரை வழங்கக்கோரி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்-அமைச்சருக்கு 7.8.2019 அன்று கடிதம் எழுதினார்.

அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திரமாநில முதல்-மந்திரியை நேரில் சந்தித்து இக்கடிதத்தை வழங்கி கிருஷ்ணா நீரை திறக்க கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய கிருஷ்ணா நதி நீரை உடனடியாக விடுவிக்குமாறு ஆந்திர மாநில முதல்-மந்திரி உத்தரவிட்டார்.

அதன்படி, சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கண்டலேறு அணை கடந்த 25.9.2019 அன்று தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த அணையிலிருந்து விடுவிக்கப்பட்ட நீர் 28.9.2019 அன்று பூண்டி ஏரியை வந்தடைந்தது.

தற்பொழுது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், உயர்ந்து வரும் ஏரிகளின் நீர் அளவினை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி சென்னை நகருக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் 525 மில்லியன் லிட்டர் குடிநீரின் அளவு இன்று முதல் (23-ந் தேதி) நாளொன்றுக்கு 650 மில்லியன் லிட்டர் அளவாக அதிகரிக்கப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News