செய்திகள்
கல்கி பகவான்

கல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்

Published On 2019-10-18 10:27 GMT   |   Update On 2019-10-18 10:27 GMT
கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில், அமெரிக்க டாலர்கள் உள்பட ரூ.93 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

புகழ் பெற்ற கல்கி ஆசிரமம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதைய பாளையத்தில் இருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன.

கல்கி ஆசிரமங்களுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அங்கு நடக்கும் சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்கிறார்கள்.

இதற்கிடையே கல்கி பகவான் விஜயகுமார் மீது, பக்தர்களுக்கு போதை பொருட்களை கொடுத்ததாகவும், சிறப்பு பூஜை என்ற பெயரில் பண வசூல் வேட்டை நடத்தினார் என்றும் புகார் எழுந்தது.

இந்த நிலையில் கல்கி பகவானின் மகன் என்.கே.வி.கிருஷ்ணா நடத்திவரும் தொழில் நிறுவனங்களில் வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன.
  
இதையடுத்து ஆந்திரா, சென்னை உள்பட நாடு முழுவதும் அந்த ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினார்கள்.

வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



அதில், இந்திய பணம் ரூ.43.9 கோடி, ரூ.18 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், ரூ.26 கோடி மதிப்பிலான 88 கிலோ தங்கம் மற்றும் ரூ. 5 கோடி மதிப்பிலான வைரம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு 93 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News