செய்திகள்
திருச்சிக்கு கொண்டு செல்வதற்காக லாரியில் யானை ஏற்றப்பட்டிருந்த காட்சி.

மரக்காணத்தில் இருந்து திருச்சிக்கு லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட 3 யானைகள்

Published On 2019-09-27 10:35 GMT   |   Update On 2019-09-27 10:35 GMT
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மரக்காணத்தில் இருந்து திருச்சிக்கு 3 யானைகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டது.

மரக்காணம்:

காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சந்தியா (வயது45), இந்து (35), ஜெயந்தி (31) ஆகிய 3 யானைகள் கோவில் நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானைக்குரிய பாகன் குணசீலன் இறந்து விட்டதால் யானைகளை பராமரிக்க ஆட்கள் இல்லாததால் மெலிந்து போனது.

எனவே 3 யானைகளுக்கும் முழு ஓய்வு அளிக்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே குரும்புரம் என்ற இடத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு இயற்கை சூழலில் யானைகள் பராமரிக்கப்பட்டது.

இந்த நிலையில் 3 யானைகளை வனத்துறையின் முறையான அனுமதி இல்லாமல் தனியார் தொண்டு நிறுவனத்தினர் வளர்க்கின்றனர் என்றும், யானைகளின் பாதுகாப்பு கருதி அதனை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னையை சேர்ந்த வனவிலங்குகள் ஆர்வலர் முரளிகிருஷ்ணா சென்னை ஐகோர்ட்டில் பொது நலவழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு குரும்புரம் பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் பராமரிக்கப்படும் 3 யானைகளையும் திருச்சியில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி நேற்று விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக்டோமர் தலைமையில் வனத்துறையினர் மற்றும் கால்நடை துறையினர் 3 யானைகளை திருச்சிக்கு அழைத்து செல்ல 3 லாரிகளுடன் மரக்காணம் குரும்புரம் பகுதிக்கு வந்தனர்.

அப்போது தொண்டு நிறுவனத்தினர் யானைகளை அழைத்து செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வனத்துறையினருக்கும், தொண்டு நிறுவனத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் சமரசம் செய்தனர்.

அதன் பின்னர் 3 யானைகளையும் லாரிகளில் ஏற்ற வனத்துறையினர் முயன்றனர். ஆனால் யானைகள் ஏற மறுத்து அடம்பிடித்தன. அதன் பின்னர் 3 யானைகளும் தனியார் வனப்பகுதிக்குள் சென்றது.

எனவே இந்த பகுதியில் உள்ள 3 யானைகளையும் லாரிகளில் ஏற்றுவதற்காக கோவை மாவட்டம் டாப்சிலிப் பகுதியில் உள்ள பயிற்சி பெற்ற யானை பாகன்கள் இன்று காலை மரக்காணம் வந்தனர். அவர்கள் ஒவ்வொரு யானைகளையும் தனித்தனியாக 3 லாரிகளில் ஏற்றினர். பின்னர் 3 யானைகளும் திருச்சியில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags:    

Similar News