செய்திகள்
இலவச சைக்கிள்கள்

இலவச சைக்கிள் திட்டம் நிறுத்தப்படவில்லை - கல்வித்துறை அதிகாரி தகவல்

Published On 2019-07-24 05:22 GMT   |   Update On 2019-07-24 05:22 GMT
இலவச சைக்கிள் திட்டம் நிறுத்தப்படவில்லை என்றும், 2019-20ம் ஆண்டில் இந்த திட்டத்துக்கு ரூ.138 கோடியே 48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை:

பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை 2001-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.

2005-ம் ஆண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

அதன்படி பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாநில நிதிநிலை அறிக்கை மீதான தணிக்கை அறிக்கையில் இலவச சைக்கிள் திட்டத்துக்கு 2013-14-ல் ரூ.217 கோடியும், 2014-15-ல் ரூ.218 கோடியும், 2015-16-ல் ரூ.235 கோடியும், 2016-17-ல் ரூ.250 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2017-18-ம் ஆண்டுக்கு ரூ.16 கோடி மட்டுமே செலவு செய்து இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் இந்த திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது 2017-18-ம் ஆண்டில் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டதால் இந்த திட்டம் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்படாததால் இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த இலவச சைக்கிள் திட்டத்தை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த துறையின் 2019-20-ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக்குறிப்பில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு நடப்பாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டுகளில் 10 லட்சத்து 87 ஆயிரத்து 147 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. 2019-20-ம் ஆண்டில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.138 கோடியே 48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எனவே இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News