செய்திகள்

தமிழகத்திலேயே ராமநாதபுரம் மாவட்டம் மீன்பிடிப்பில் முதலிடம்

Published On 2019-06-07 18:25 GMT   |   Update On 2019-06-07 18:25 GMT
தமிழத்திலேயே ராமநாதபுரம் மாவட்டத் தில் தான் கடந்த ஆண்டு அதிகபட்சமாக 1½ லட்சம் டன் மீன்கள் பிடிபட்டுள்ளன.
ராமநாதபுரம்:

தமிழகத்தில் கடற்பரப்பு உள்ள 13 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 7 லட்சத்து 50 ஆயிரம் மீனவர்கள் சுமார் 6 ஆயிரம் விசைப்படகுகளிலும், 40 ஆயிரம் நாட்டுப்படகுகளிலும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலேயே நீண்ட நெடிய கடற்பரப்பை கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் ஆயிரத்து 522 விசைப்படகுகளும், 4 ஆயிரத்து 767 நாட்டுப்படகுகளும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு 7 லட்சத்துஆயிரத்து 887 டன் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 45 ஆயிரம் டன் மீன்கள் ஆகும். இதுதமிழகத்திலேயே அதிகஅளவு என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே, கடந்த 2017-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 94 ஆயிரத்து 952 டன் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2017-ம் ஆண்டை காட்டிலும் கடந்த ஆண்டு 20 சதவீதம் அதிகமாக மீன்கள் பிடிபட்டுள்ளன.

அரசின் அனுமதி பெற்ற மீன்பிடி படகுகளில் பிடிபட்ட மீன்களின் அளவீட்டின்படி இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தஅளவிற்கு அள்ள அள்ள குறையாத கடல்வளம் மிக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களின் நலனுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ஆன்லைன் மூலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்ததிட்டத்தின்கீழ் மாவட்டத்தில் மீன்வளத்துறையின் சார்பில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 11 இ-சேவை மையங்களில் இதுவரை 2 ஆயிரத்து 605 மீனவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்த தகவலை ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் தெரிவித்தார். அரசின் கணக்கெடுப்பின்படி மீன்பிடிப்பில் ராமநாதபுரம் மாவட்டம் தமிழக அளவில் முதலிடம் வகிப்பதாக தெரியவந்துள்ள நிலையில் அரசின் அனுமதியின்றி தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கடந்த ஆண்டு சுமார் 30 ஆயிரம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் அரசின் கணக்கின்படி 1½ லட்சம் டன் அளவைவிட மேலும் 30 ஆயிரம் டன் அதிகம் மீன்பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News