செய்திகள்
கரூர் அரசு ஆஸ்பத்திரியில் வேலைநிறுத்தம் செய்த நர்சுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

கரூர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சுகள் திடீர் வேலைநிறுத்தம்

Published On 2019-06-05 04:31 GMT   |   Update On 2019-06-05 04:31 GMT
கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று நர்சுகள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
கரூர்:

கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பணிக்கு வந்த நர்சுகள் திடீரென பணியை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் கரூர் மாவட்ட கிளை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணை தலைவர் நல்லம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கார்த்திக், செயலாளர் செல்வராணி, பொருளாளர் தனலட்சுமி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதுபற்றி நர்சுகள் கூறுகையில், கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் எங்களுக்கு அதிக வேலை கொடுக்கப்படுகிறது. குறிப்பாக ஆய்வக தொழில்நுட்ப நிபுணர்கள் புறநோயாளிகளுக்கு மட்டும் ரத்தம் எடுக்கின்றனர். உள் நோயாளிகளுக்கு எடுப்பதில்லை. அவர்களுக்கு பதிலாக எங்களை விட்டு ரத்தம் எடுக்க சொல்கின்றனர்.


மேலும் நோயாளிகளுக்கு டாக்டர்கள் போடவேண்டிய ஊசியை எங்கள் மூலம் போட சொல்கின்றனர். நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெற்று விட்டு திரும்பி செல்லும் போது டாக்டர்கள் அறிக்கை எழுதிக்கொடுக்க வேண்டும். அதனை எங்களை எழுத சொல்கின்றனர்.

இப்படி எங்களுக்கு பல்வேறு வகைகளில் வேலைகளை அதிகமாக்குகின்றனர். இதனால் நாங்கள் நோயாளிகளை சரியாக கவனிக்க முடிவதில்லை. இதுகுறித்து எங்களது கண்காணிப்பாளரிடம் தெரிவித்தும் அவர் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

நர்சுகள் போராட்டத்தால் கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று காலை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்ததால் பெரும் அவதிக்கு உள்ளாகினர். போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளிடம் மருத்துவமனை தலைமை டாக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News