செய்திகள்

முட்டை லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.11 லட்சத்து 9 ஆயிரம் பறிமுதல்

Published On 2019-03-19 17:34 GMT   |   Update On 2019-03-19 17:34 GMT
பரமத்திவேலூரில் முட்டை லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.11 லட்சத்து 9 ஆயிரம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பரமத்திவேலூர்:

பாராளுமன்ற தேர்தல் தேதி கடந்த 10-ந்தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் உள்ளிட்டவைகள் பட்டுவாடா செய்யாமல் தடுப்பதற்கான நடவடிக்கையில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் தேர்தல் விதிமுறைகள் மீறி உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், ஆபரணம் மற்றும் பரிசு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதற்காக நாமக்கல் மாவட்டத்தில் நிலையான தேர்தல் கண்காணிப்பு குழு, பறக்கும் படை ஆகியவை நியமிக்கப்பட்டு உள்ளன.

இன்று காலை 6 மணிக்கு நிலையான தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி செங்கோடன் தலைமையிலான அலுவலர்கள் மற்றும் போலீசார் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப்பாலம் போலீஸ் செக்போஸ்ட் அருகே நின்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

காலை சுமார் 7.45 மணி அளவில் கேரளாவில் இருந்து நாமக்கல்லுக்கு 2 லாரிகள் வந்து கொண்டிருந்தது. இந்த லாரிகளை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் 11 லட்சத்து 9 ஆயிரத்து 870 ரூபாய் வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து லாரி டிரைவர்கள் கிருஷ்ணன், அசோகன் ஆகியோர் கூறுகையில், நாங்கள் நாமக்கல்லில் இருந்து முட்டை லோடு ஏற்றி கேரளாவுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து விட்டு திரும்ப வருகிறோம். 11 லட்சத்து 9 ஆயிரத்து 870 ரூபாயும் முட்டை வியாபாரம் செய்ததில் கிடைத்த பணமாகும் என்றனர்.

இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என அவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர். அதற்கு டிரைவர்கள் தங்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை என தெரிவித்தனர்.

இதனால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் கொண்டு வந்து இதனை பெற்றுக் கொள்ளுங்கள் என அறிவுரை கூறி 2 பேரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த பணம்அரசு கருவூலத்தில் சேர்ப்பதற்காக உதவி தேர்தல் அலுவலர் தேவிகாராணி ஒப்படைக்கப்பட உள்ளது. #tamilnews
Tags:    

Similar News