செய்திகள்

பிரமாண்ட பெருமாள் சிலை வழக்கில் விரைவில் விசாரணை

Published On 2019-02-07 08:07 GMT   |   Update On 2019-02-07 08:07 GMT
பிரமாண்ட பெருமாள் சிலையை பெங்களூரு கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் ரத்தினம் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #PerumalStatue
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ரத்தினம் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

அதில், ‘கர்நாடக மாநிலம், ஈஜிபுரா கிராமத்தில் கோதண்டராமர் கோவில் உள்ளது. இங்கு 350 டன் பெருமாள் சிலை நிறுவப்பட உள்ளது. ஒரே கல்லில் செய்யப்பட்ட இந்த சிலை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொரக்கோட்டை கிராமத்தில் செய்யப்பட்டது.

இந்த சிலையை சாலை வழியாக மிகப்பெரிய லாரியில் கொண்டு செல்லும்போது, எடை அதிகம் உள்ளதால், சாலைகள் சேதம் அடைகின்றன. சாலையோரங்களில் உள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதம் அடைகின்றன.

எனவே, இந்த சிலையை கர்நாடகா மாநிலத்துக்கு எடுத்து செல்ல தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிலைகள் கொண்டு செல்ல அனுமதி வழங்கி தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வக்கீல் பூபால் என்பவர், இந்த சிலை கொண்டு செல்ல தடை கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் நேற்று விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

வக்கீல் ரத்தினம் ஏற்கனவே தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #PerumalStatue

Tags:    

Similar News