செய்திகள்

சென்னையில் முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் மரணம்

Published On 2018-12-23 05:52 GMT   |   Update On 2018-12-23 05:52 GMT
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் இன்று அதிகாலை காலமானார். #Aravanan
சென்னை:

முன்னாள் துணை வேந்தர் க.ப. அறவாணன் சென்னையில் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. அறவாணன் சென்னை அமைந்தகரை முனி ரத்தினம் தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே இருந்து வந்தார். இன்று அதிகாலையில் திடீரென்று அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி உயிர் பிரிந்தது.

அறவாணன் மரணச் செய்தி அறிந்ததும் ஏராளமான தமிழறிஞர்கள் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

க.ப. அறவாணன் நெல்லை மாவட்டம் கடலங்குடியில் 9.8.1941-ல் பிறந்தார். தமிழில் புலமைபெற்ற அவர் தமிழில் உயர்கல்வி பெற்று புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார். பின்னர் லயோலா கல்லூரியிலும் பணியாற்றினார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பணியாற்றியவர். பல பல்கலைக்கழகங்களின் பாடத்திட்ட குழு உறுப்பினராகவும் இருந்தவர்.

50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கிறார். 3 முறை தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான விருதையும் பெற்று இருக்கிறார் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் இலக்கிய பரிசு பெற்றவர்.

அறவாணன் மரணம் தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

நெல்லை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தமிழறிஞர் க.ப. அறவாணன் மரணச்செய்தி கேட்டு துயரமடைந்தேன். தமிழறிஞரின் மரணம் தமிழகத்திற்கும் உலக தமிழருக்கும் பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு தமிழக பா.ஜனதா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
Tags:    

Similar News