செய்திகள்

தமிழகத்தில் ஒருபோதும் மின்வெட்டு வராது - அமைச்சர் தங்கமணி பேச்சு

Published On 2018-09-16 05:50 GMT   |   Update On 2018-09-16 06:03 GMT
தமிழகத்தில் மின்வெட்டு நிலவுவதாக திட்டமிட்டு வதந்தியை பரப்புகிறார்கள் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். #MinisterThangamani #PowerShortage #TNGovernment

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

அண்ணா பிறந்த நாள் பொதுக் கூட்டத்தை நடத்துவதற்கு முழு உரிமை உள்ள இயக்கம் அ.தி.மு.க. தான்.

ஜெயலலிதா ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும், கழகத்திற்கு துரோகம் விளைவித்த தினகரன் மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் மின்வெட்டு வரப்போகிறது என்று பேசி வருகிறார். அது முற்றிலும் தவறானது.

ஏனென்றால் ஜெயலலிதா இருக்கும்போதே தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி அமைத்துள்ளார். இந்திய சமன்பாட்டு அறிக்கை கூட தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது என அறிக்கை வழங்கியுள்ளது.

கடந்த 9-ந் தேதியும் 10-ந் தேதியும் மத்திய தொகுப்பிலிருந்து வரவேண்டிய மின்சாரம் பராமரிப்பு பணிக்காக வழங்கப்படவில்லை. அதேபோல காற்றாலை மின்சாரம் இருந்த காரணத்தால் அனல் மின்சார தயாரிக்கும் பணியை நிறுத்திருந்தோம். திடீரென்று காற்றாலை மின்சாரம் வராத காரணத்தால் அனல் மின்சார உற்பத்தியை திடீரென கொடுக்க முடியாத சூழலில் இருந்தோம்.

‌அதை அடுத்த நாளே சரிசெய்து சகஜ நிலைக்கு திருப்பி அமைத்து விட்டோம். மின் விநியோகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது நிலக்கரி இல்லை என்று வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

 


நிலக்கரி குறித்து பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதம் ஒரு நினைவூட்டல் கடிதம் தான். ஏற்கனவே தமிழகத்திற்கு அதிக நிலக்கரி வழங்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுள்ளார். அதற்கான நினைவூட்டல் கடிதம் தான் அது.

தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டே இல்லாத போலவும், இந்த ஆட்சியில் தான் மின்வெட்டு இருப்பது போலவும் பேசி வருகிறார்கள். மின்வெட்டு குறித்து பேசுவதற்கு தி.மு.க.வுக்கு அருகதை இல்லை.

முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். நானும் ரெயில்வே மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். வருகிற 18-ம் தேதி மத்திய ரெயில்வே மந்திரியை சந்தித்து அதிக வேகன்களில் நிலக்கரியை ஏற்றி வந்து வழங்க வேண்டுமென்று கேட்க உள்ளேன்.

நிலக்கரியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளது. இன்னும் 20, 25 நாள்களில் அந்த நிலக்கரியும் வந்து சேரும்.

ஆகவே, மக்கள் வதந்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் கூடங்குளத்தில் 400 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் ஒருபோதும் மின்வெட்டு வராது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். #MinisterThangamani #PowerShortage #TNGovernment

Tags:    

Similar News