செய்திகள்

தேவதானப்பட்டியில் சாரல் மழை - அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நாசம்

Published On 2018-08-19 11:16 GMT   |   Update On 2018-08-19 11:16 GMT
தேவதானப்பட்டி பகுதியில் சாரல் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தலை சாய்ந்துள்ளது.

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் பெரியகுளம் யூனியனுக்குட்பட்ட தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆண்டுதோறும் இரு போக நெல் சாகுபடி நடைபெறும்.

ஆனால் பருவ மழை பொய்த்துப் போனதால் முறை தவறி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது 2-ம் போக அறுவடை பணி தொடங்கும் நிலையில் உள்ளது. கடந்த சில நாட்களாக ஜெயமங்கலம், மேல்மங்கலம், தேவதானப்பட்டி பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் தரையில் சாய்ந்து உள்ளது.

இதனால் நெல் மணிகள் மண்ணில் முளைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் சிரமப்பட்டு நெல் சாகுபடி செய்துள்ளோம். தற்போது மழை காரணமாக நெற்பயிர்கள் தரையில் சாய்ந்து வருவது வேதனையாக உள்ளது என்றனர்.

Tags:    

Similar News