செய்திகள்

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடும் - டிடிவி தினகரன்

Published On 2018-08-12 14:16 GMT   |   Update On 2018-08-12 14:16 GMT
திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அதிமுகவின் போஸ் ஆகியோர் மறைவால் காலியாக அறிவிக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளின் இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடும் என தினகரன் அறிவித்துள்ளார். #TTV #AMMK
சென்னை :

திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2-ந்தேதி மதுரையில் இறந்தார். அவரைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி இறந்தார்.

இவர்களின் மறைவு காரணமாக திருவாரூர் தொகுதியும், திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளதாக தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது.

எம்.எல்.ஏ. மறைந்தால் அந்த தொகுதியில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் கமி‌ஷன் விதி. அதன்படி இந்த இரு தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதனால், டிசம்பர் மாதம் நடைபெறும் 4 மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்த்து திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது. 

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளின் இடைத்தேர்தலில் அமமுக கட்சி போட்டியிடும் என தெரிவித்தார்.

மேலும், கட்சியில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் அலோசிக்கப்பட்டதாகவும், மக்களின் ஆதரவு தங்களது கட்சிக்கு இருப்பதால் இரண்டு தொகுதிகளிலும் அமமுக கட்சி வெற்றி பெரும் எனவும் தினகரன் தெரிவித்தார். #TTV #AMMK
Tags:    

Similar News