செய்திகள்

விடுமுறை தினத்தன்று கூடுதல் விலைக்கு மது விற்ற பார் ஊழியர்கள் 4 பேர் கைது

Published On 2018-08-09 10:07 GMT   |   Update On 2018-08-09 10:07 GMT
தாராபுரத்தில் விடுமுறை தினத்தன்று கூடுதல் விலைக்கு மது விற்ற பார் ஊழியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம்:

தாராபுரம் ரெட்டவலசு ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரெட்டவலசு டாஸ்மாக் கடை பாரில் வேலை பார்த்து வரும் ஊழியர்கள் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இன்று காலையும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.

இந்த தகவல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அக்கட்சி மாவட்ட செயலாளர் தமிழ் முத்து, நகர செயலாளர் செந்தில் குமார், துணை செயலாளர் உதயகுமார், மாவட்ட துணை செயலாளர் ஆடலரசு மற்றும் பொதுமக்கள் ரெட்டவலசு ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுபாருக்கு சென்றனர். இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சட்டம் -ஒழுங்கு இன்ஸ்பெக்டர் முருகேசன், மது விலக்கு இன்ஸ்பெக்டர் ராஜ் கண்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

அப்போது கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த பார் ஊழியர்கள் கதிர் (22), பிரபாகரன் (24), ராஜேந்திரன் (21), சக்திவேல் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 650 மது பாட்டில்கள், ரொக்கப்பணம் ரூ.4, 500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News