செய்திகள்

ஈரானில் மீட்கப்பட்ட 21 தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்

Published On 2018-08-04 08:42 GMT   |   Update On 2018-08-04 08:42 GMT
ஈரானில் மீட்கப்பட்ட 21 தமிழக மீனவர்கள் இன்று சென்னைக்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர். #Fishermen

சென்னை:

தமிழக மீனவர்கள் 21 பேர் ஈரான் நாட்டிற்கு மீன் பிடிக்கும் தொழிலுக்கு சென்று விட்டு கடந்த 7 மாதமாக சம்பளம் இல்லாமல் அவதிப்பட்டனர்.

உணவு, தங்குமிடம் இல்லாமல் நடுரோட்டில் கிடந்தனர். தங்களுக்கு வேலை வேண்டாம், இந்தியாவிற்கு திருப்பி அனுப்புங்கள் என்று மீனவர்கள் கேட்ட போது விசாவை ரத்து செய்து இந்தியா திரும்ப வேண்டுமானால் அதற்கு ரூ.50 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும் என்று கூறினர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் அவர்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வரக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

தி.மு.க. எம்.பி. கனிமொழியும் மத்திய வெளியுறவு துறை அமைச்சகர் சுஷ்மா சுவராஜை நேரில் சந்தித்து தமிழக மீனவர்களை மீட்டு அழைத்து வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈரான் நாட்டு தூதரக உதவியுடன் 21 மீனவர்களையும் பத்திரமாக மீட்டது.

மேலும் இந்திய தூதரகமே மீனவர்களுக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து ஈரானில் இருந்து தோகா வழியாக சென்னைக்கு அனுப்பி வைத்தது.

தமிழக மீனவர்கள் 21 பேரும் அதிகாலை சென்னை வந்து சேர்த்தனர். விமான நிலையத்தில் அதிகாரிகள், உறவினர்கள் வரவேற்று அழைத்து சென்றனர்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கைளைச் சேர்ந்த மீனவர்கள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Tags:    

Similar News