செய்திகள்

மதுரை தோப்பூரில் அமைகிறது எய்ம்ஸ் மருத்துவமனை

Published On 2018-06-20 04:20 GMT   |   Update On 2018-06-20 08:00 GMT
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைக்கப்படுவதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதன் மூலம் 17 மாவட்ட மக்கள் பயனடைகிறார்கள். #AIIMS #AIIMSinMadurai
மதுரை:

நாட்டின் சிறந்த மருத்துவமனையாக கருதப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அமைக்க மத்திய பட்ஜெட்டில் கடந்த 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஈரோடு, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அந்த இடங்களை மத்திய அரசின் தேர்வுக்குழு பார்வையிட்டு ஆய்வு நடத்தியது.

மதுரை தோப்பூர், தஞ்சை செங்கிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் அதற்கான வசதிகள் இருப்பதாக தேர்வுக்குழுவினர் கண்டறிந்தனர்.

ஆனால் மதுரை தான் எய்ம்ஸ் அமைக்க தகுதியான இடம் என்று தேர்வு செய்யப்பட்டது. ஆனாலும் அறிவிக்கப்படாததால் எங்கு அமையும்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.


தஞ்சை செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்தித்து மனு அளித்தார்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம் என்று பகீரங்கமாக அறிவித்தனர். இதனால் எய்ம்ஸ் அமைவது தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டிலும் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவிடம் குறித்து 3 மாதத்தில் முடிவு செய்து அறிவிப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் சஞ்சய்ராய், தமிழக அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதியாகி உள்ளது. இதனால் எய்ம்ஸ் இடம் தேர்வில் இருந்து வந்த சிக்கல் தீர்ந்துள்ளது.

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை, தமிழக அரசிடம் 4 திட்டங்களை உடனடியாக நிறைவேற்றித் தரும்படியும் கேட்டுள்ளது.

* எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் 4 வழிச்சாலையை இணைக்க வேண்டும்.

* 20 மெகாவாட் மின் வசதி செய்ய வேண்டும். குறைந்த உயரத்தில் செல்லும் மின் இணைப்பு கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

* போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.

* எண்ணை குழாய் பதித்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திடம், எய்ம்ஸ் கட்டுமானம் குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை தோப்பூரில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ரூ. 100 கோடி செலவில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய உயர்தர சிகிச்சை அரங்குகள், மேலும் 100 மருத்துவ படிப்புக்கான வசதி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள், நர்ஸிங் படிப்புகள் ஆகியவை இங்கு இடம் பெறுகிறது.

இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 கோடி மக்கள் பயனடைகிறார்கள்.


இது தொடர்பாக மதுரை மேலூரில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், தனது கைப்பேசியில் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் சஞ்சய்ராய் அனுப்பிய குறுந்தகவலை படித்துக் காட்டினார்.

அதில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாகவும், அதற்காக சில கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தர தமிழக அரசிற்கு மத்திய அரசு கோரிக்கை அனுப்பி உள்ளதையும் உறுதிப்படுத்தினார்.

இதையடுத்தே எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான இடம் தேர்வு உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேலும் கூறுகையில், தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரை தோப்பூரில் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

டெல்லியில் கிடைக்கக் கூடிய உயர் ரக சிகிச்சை மதுரையிலும் இனி கிடைக்கும். இந்த அறிவிப்பு தென் மாவட்ட மக்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது என்றார். #AIIMS #AIIMSinMadurai #Thoppur #RBUdhayakumar
Tags:    

Similar News