செய்திகள்

சுங்கச்சாவடி தாக்குதல் வழக்கில் நிபந்தனை ஜாமின் - சிறையிலிருந்து வேல்முருகன் விடுதலை

Published On 2018-06-19 12:57 GMT   |   Update On 2018-06-19 12:57 GMT
சுங்கச்சாவடி தாக்குதல் மற்றும் என்.எல்.சி முற்றுகை வழக்கில் ஜாமின் கிடைத்ததை அடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல் முருகன் புழல் சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டார். #VelMurugan
சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடி தாக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடந்த மாதம் 26-ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இரண்டு நாட்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்ததன் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுநீரக கோளாறும் இருப்பதால் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதற்கிடையே, இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதால் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் ஜாமின் கோரி வேல்முருகன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை இன்று விசாரித்த நீதிபதி, நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கினார்.

இதனை அடுத்து, மாலை புழல் சிறையில் இருந்து வேல்முருகன் விடுதலை செய்யப்பட்டார். 
Tags:    

Similar News