செய்திகள்

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு ‘குக்கர்’ சப்ளையா?: பறக்கும் படை கண்காணிப்பு

Published On 2017-12-12 08:08 GMT   |   Update On 2017-12-12 08:08 GMT
ஆர்.கே.நகரில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ரசீது இன்றி கொண்டு வரப்பட்ட 500 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து குக்கர்கள் சப்ளை செய்யப்படுகிறதா? என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த இடைத்தேர்தல் பணப் பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

8 மாதங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் அங்கு தேர்தல் நடக்கிறது. கடந்த முறையை போல இந்த தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் கிடுக்குப்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தொகுதி முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் அனுமதிபெற்ற வாகனங்கள் மட்டுமே ஆர்.கே.நகர் தொகுதிக்குள் அனுமதிக்கபடுகிறது. மற்ற வாகனங்கள் தொகுதியின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளிலேயே திருப்பி அனுப்பப்படுகிறது.

நேற்று இரவு பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ரசீது இன்றி கொண்டு வரப்பட்ட 500 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை ஏற்றி வந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர்கள் சப்ளை செய்யப்படுகிறதா? என்பது பற்றி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பறக்கும் படையினருடன் இணைந்து போலீசாரும் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் பெண்களுக்கு ஸ்கூட்டி தருவதாக கூறி அமைச்சர் ஒருவர் டோக்கன் வினியோகித்து வருவதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றியும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதுதொடர்பான டோக்கன்கள் பொது மக்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதே போல ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் பணப்பட்டுவாடாவும் நடைபெற்று வருவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இருப்பினும் பல இடங்களில் ரகசியமாக பணப் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் தேர்தல் ஆணையத்திற்கு கடும் சவாலாகவே உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் பணியாற்றி வரும் தேர்தல் செலவின பார்வையாளர்கள் 3 பேர் தொகுதி முழுவதும் விதிமீறல்கள் நடைபெற்று வருவதாகவும், அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனை மாநில தலைமை தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி வெளிப்படையாகவே தெரிவித்தார். இதுபோன்ற சம்பவங்களால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் ரத்து செய்யப்பட்டு விடுமோ என்கிற கேள்வியும் எழுந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் இணைந்து விதிமீறல்களை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News