செய்திகள்

சுதந்திர தின வாழ்த்து அனுப்பிய ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்து கடிதம்

Published On 2017-08-14 15:39 GMT   |   Update On 2017-08-14 15:39 GMT
சுதந்திர தின வாழ்த்து அனுப்பிய ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:

கோயம்புத்தூரை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் ஸ்ரீவந்த். ஒன்றாம் வகுப்பில் படித்து வருகிறார். இந்தியாவின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி, தேசியக் கொடி மற்றும் இந்திய வரைபடத்தை மூவர்ணத்தில் வரைந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பி வைத்திருந்தான்.

ஸ்ரீவந்தின் சுதந்திர தின வாழ்த்து செய்தியை கண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சி அடைந்து, அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், “நீ வரைந்து அனுப்பிய வாழ்த்துச் செய்தியை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். இத்தனை சிறிய வயதில் நீ வெளிப்படுத்திய உனது தேச பக்தியை கண்டு மிகவும் பெருமைப்படுகிறேன்.
உன்னால் நாடும் வீடும் பெருமைப்பட வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

ஒன்றாம் வகுப்பு மாணவனின் சுதந்திர தின வாழ்த்துக்கு மதிப்பளித்தும், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கடிதம் எழுதிய முதல்வர் பழனிச்சாமியின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags:    

Similar News