செய்திகள்

வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது

Published On 2017-07-31 10:27 GMT   |   Update On 2017-07-31 10:28 GMT
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சத்தை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதால், போலீசார் ஓய்வுபெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கல்லட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ் (வயது 54). இவர் கோவை வெரைட்டி ஹால் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு வேலையிலிருந்து அவர் விருப்ப ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரிக்கு வந்த நடராஜ் புதுமந்து கிராமத்தை சேர்ந்த ராஜாமணி என்பவரை சந்தித்தார்.

அப்போது ‘‘ எனக்கு கோவையில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகளை தெரியும். தற்போது போலீசில் டெக்னிக் ஆபீசர் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. படித்த இளைஞர்கள் இருந்தால் அவர்களுக்கு வேலை வாங்கி தருகிறேன். உயர் அதிகாரிகளுக்கு ரூ.4 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். பணம் கொடுத்தால் உடனே வேலை கிடைத்து விடும்’ என்று நடராஜ் கூறியுள்ளார்.

இதை நம்பிய ராஜா மணி, தனது மகனுக்கு வேலை வாங்கி தர வேண்டும் என்று கூறி 7 தவணைகளில் மொத்தம் ரூ.4 லட்சத்து 15 ஆயிரம் பணம் கொடுத்தார்.

இதற்கிடையே பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கி தராமல் நடராஜ் இழுத்தடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த ராஜா மணி, கோத்தகிரி போலீசில் புகார் செய்தார்.

இதைதொடர்ந்து கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவை நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் இருந்த நடராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோத்தகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News