செய்திகள்

டி.டி.வி.தினகரன்-மனைவியிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் துருவித் துருவி விசாரணை

Published On 2017-04-27 13:18 GMT   |   Update On 2017-04-27 13:18 GMT
தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பாக டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது மனைவியிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னை:

தலைமை தேர்தல் கமி‌ஷனரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தைப் பெற அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 5 நாள் போலீஸ் காவலில் எடுத்தனர். அவருடன் கைது செய்யப்பட்ட அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் போலீசார் 5 நாள் காவலில் எடுத்துள்ளனர்.

அவர்கள் இருவரிடமும் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தி கூடுதல் ஆதாரங்களை கைப்பற்றுவதுடன், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக உள்ளனர்.

இதற்காக டி.டி.வி.தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார், பலத்த பாதுகாப்புடன் இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. டெல்லி காவல் துணை ஆணையர் சஞ்சய் ஷெராவத் தமையில் 10 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது. தினகரனின் மனைவி அனுராதாவிடமும் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, தினகரனை மேலும் சில இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். டி.டி.வி.தினகரன் வீடு மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவின் வீட்டில் சோதனை நடத்தவும் டெல்லி போலீசார் நேற்று உரிய அனுமதி பெற்றுள்ளனர். அதன்படி சோதனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News