செய்திகள்

சந்தூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை: வீடுகள், மின்கம்பங்கள் சேதம்

Published On 2017-04-26 17:07 GMT   |   Update On 2017-04-26 17:07 GMT
சந்தூரில் சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் வீடுகள், மின் கம்பங்கள் சேதமடைந்தது.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில் உள்ள சந்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அதிக காற்றுடன் கூடிய மழை பெய்தது. நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் ஆலங்கட்டி மழை பெய்தது. அப்போது வீசிய சூறாவளி காற்றால் மாட்டு கொட்டகைகள், குடிசையின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சேதமடைந்தது.
அதே போல வீடுகளின் மண்சுவர்களும் இடிந்து விழுந்தன. தென்னை உள்ளிட்ட ஏராளமான மரங்கள் சாய்ந்தன. பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மாமரங்களில் இருந்த மாங்காய்கள் காற்றில் விழுந்தன. இந்த மழையால் மரத்தில் உள்ள மாங்காய்களும் அழுகும் நிலை ஏற்பட்டன.

இந்த சூறாவளி காற்று மற்றும் மழை பற்றி தகவல் அறிந்ததும் போச்சம்பள்ளி தாசில்தார் பண்டரிநாதன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்சர்மா மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று சேதத்தை ஆய்வு செய்தனர். இந்த பலத்த சூறை காற்றுக்கு ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்களை பொருத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சந்தூரில் நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. கிருஷ்ணகிரியில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழையின் காரணமாக இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

Similar News